பதிவு செய்த நாள்
03
ஏப்
2018
01:04
கரூர்: கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தனர். அதில், கூறியிருப்பதாவது: கரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே, டாஸ்மாக் கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது. ஆன்மிக தலங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து, 100 மீட்டருக்கு அப்பால் தான் மதுபானக் கடை அமைக்க வேண்டும் என்ற அரசின் ஆணையை மதிக்காமல், கோவில் அருகே, டாஸ்மாக் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகள், குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. பக்தர்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகின்றனர். கேலி, கிண்டல், ஆபாச வார்த்தை போன்றவற்றால் பெண்கள் கோவிலுக்கு வரவே அச்சப்படுகின்றனர். கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். நடவடிக்கை இல்லையெனில், வரும், 9ல், டாஸ்மாக் கடை முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.