பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
10:04
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பெருவிழா நிறைவடைந்த நிலையில், விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் துவங்கின. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாதப் பெருவிழா, மார்ச், 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச், 24ம் தேதி அதிகார நந்தி சேவையும், மார்ச், 28ம் தேதி தேர் திருவிழாவும், அடுத்த நாள், அறுபத்து மூவர் விழாவும் நடந்தது. மார்ச், 31ம் தேதி, கபாலீஸ்வரர் திருக்கல்யாணத்துடன், கொடி இறக்கப்பட்டது.
பத்து நாட்களாக, உற்சவர், பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து, உற்சவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில், 10 நாட்கள் விடையாற்றி விழா துவங்கின. இவ்விழாவில் தினமும், உற்சவர் மிக எளிமையான அலங்காரத்துடன் மண்டபத்தில் எழுந்தருள்வார். அவர் முன்னிலையில் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும். நேற்றைய விடையாற்றி நிகழ்ச்சியில், ஆரூர் சுந்தர்ராமனின், ’வைகை பெற்ற வரம்’ எனும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, பிரியா சகோதரிகள் குழவினரின் பாட்டு கச்சேரி நடந்தது.