பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
11:04
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலமாக நடந்தது. இரண்டு லட்சம் பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில், பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நடப்பாண்டு குண்டம் விழா, மார்ச், ௨௦ல் துவங்கியது. தினமும், நித்தியப்படி பூஜைகள்நடந்தன.
நேற்று முன்தினம், குண்டத்துக்கு தேவைப்படும் விறகுகள், கோவில் முன் குவிக்கப்பட்டன. குண்டம்இறங்க வசதியாக, 20 கி.மீ.,க்கு கட்டப்பட்ட தடுப்புகளில், ஒரு வாரமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர்.நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு குண்டத்தில் விறகுகள் அடுக்கி, தீயிடப்பட்டது. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, 10 அடி நீளம், 4 அடிஅகலத்தில் குண்டம் தயார் செய்யப்பட்டது. அதிகாலை, 3:00 மணிக்கு வாத்தியங்கள் முழங்க, அம்மன் அழைப்பு நடந்தது.தொடர்ந்து, அதிகாலை, ௩:௪௫ மணிக்கு, தீமிதி விழா துவங்கியது. கோவில் பூசாரிகள் முதலில் இறங்கினர். அடுத்து, பரம்பரை அறங்காவலர்கள், பக்தர்கள் இறங்கினர்.குண்டம் இறங்கியவர்களுக்கு, கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசிக்க, ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று மாலை, ௪:௦௦ மணி வரை, தமிழகம், கர்நாடகமாநிலத்தைச் சேர்ந்த, இரண்டு லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.விழா முடியும் நிலையில், மதியம், 3:30 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. ஆனாலும், மழையை பொருட்படுத்தாமல், பக்தர்கள் தீ மிதித்தனர். மாலை, ௪:௦௦ மணிக்கு மழை நிற்க, விழாவும் முடிவுக்கு வந்தது.திருப்பூர் அருகே, பெருமாநல்லுாரில் உள்ள பழமையான, கொண்டத்து காளியம்மன் கோவில், திருப்பூரின் பண்ணாரி என்றழைக்கப்படுகிறது. இங்கு, நேற்று அதிகாலை, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி துவங்கியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர்; அதிகாலை, 4:00க்கு துவங்கிய நிகழ்ச்சி, மதியம், 12:00 மணி வரை நீடித்தது.திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் என, பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 500க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.