பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
11:04
ஆமதாபாத்:குஜராத் மாநிலத்தில் உள்ள, சோம்நாத் கோவில் துாண்களுக்கு, தங்கத் தகடு பொருத்தும் பணி துவங்கியுள்ளது. குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இங்கு, கிர் சோம்நாத் மாவட்டத்தில், 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான, சோம்நாத் சிவன் கோவில் உள்ளது.
இங்கு, கோவில் கருவறை மற்றும் முக்கிய நுழைவாயில் கதவுகளுக்கு, தங்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. சிவனின் உடுக்கை மற்றும் திரிசூலத்திற்கும் தங்கக் கவசம் உள்ளது. இந்நிலையில், கோவிலில் உள்ள, 72 துாண்களுக்கும் தங்கத் தகடு பொருத்த, கோவில் அறக்கட்டளை முடிவு செய்தது. இதுகுறித்து, கோவில் மேலாளர், விஜயசிங் சாவ்டா கூறியதாவது:கோவிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் நன்கொடையில், கோவிலின் ஒவ்வொரு பகுதியாக தங்கத் தகடு பதிக்கும் பணி நடந்து வருகிறது.தற்போது, கோவிலில் உள்ள, 72 துாண்களுக்கு தங்கத் தகடு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 10 துாண்களுக்கு, 30 கிலோ எடையுள்ள, தங்கத் தகடுகள் பொருத்தும் பணி நடக்கிறது; படிப்படியாக, அனைத்து துாண்களுக்கும் தங்கத் தகடு பதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.