ஆத்தீஸ்வரசுவாமி கோவிலில் குழந்தை பாக்கியம் வேண்டி அமுது படையல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2018 12:04
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே வேப்பத்துார் ஆத்தீஸ்வரசுவாமி கோவிலில் குழந்தை பாக்கியம் வேண்டி அமுது படையல் விழா நடந்தது. இதில் ஏராளமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவனடியார்களில் ஒருவரான சிறுதொண்டர் நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவு அளித்து பிறகே தான் உணவருந்தும் பழக்கத்தை கொண்டிருந்தார். அவரது இந்த தொண்டை சோதிக்க விரும்பிய சிவபெருமான், ஒருநாள் அவரது வீட்டுக்கு சிவனடியாராக வந்து இன்று உனது இல்லத்தில் உணவருந்த இருப்பதாக கூறுகிறார். அப்போது அவருக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டார். சிவனடியாராக வந்த சிவபெருமானோ தனக்கு பிள்ளைக்கறி வேண்டுமென கேட்டார். அவரது விரும்பத்தை நிறைவேற்றும் வகையில் அவரது ஒரே மகனான சீராளனை கொன்று பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாருக்கு அமுது படையல் அளிக்க இருக்கும் வேளையில் வீட்டில் உள்ள அனைவரையும் சிவனடியார் வரச்சொன்னார். அப்போது சிறுதொண்டர், அவரது மனைவியும் மட்டும் வந்தனர். இதற்கு எங்கே உன் குழந்தைகள் என கேட்க செய்தறியாமல் தவித்தனர்.
பின்னர் குழந்தை இல்லாத வீட்டில் நான் உணவருந்த மாட்டேன் என்றார். இதனால் தனது ஒரே மகன் சீராளனை தங்களுக்காக கொன்று சமைத்துள்ள உண்மையை கூறினர். அப்போது சிவனடியார் உன் மகனது பெயரை சொல்லி வாசலில் நின்று மும்முறை கூப்பிட சொல்ல, அவ்வாறே அவர் அழைக்கும்போது மகன் சீராளான் உயிருடன் ஓடி வந்தார். அப்போது தான் தங்கள் இல்லத்துக்கு சிவனடியாராக வந்தது சிவபெருமானே என மெய்சிலிர்த்து போயினர். இந்த புராணத்தை குறிக்கும் வகையில் கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் ஆத்தீஸ்வரசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசை தினத்துக்கு மூன்றாவது நாளில் நவதாணியங்கள் மற்றும் அரிசி, உளுந்து மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயார் செய்யும் சீராளன் உருவத்தை ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் சிறப்பு பூஜைகளுடன் அமுது படையல் நடைபெறுவது வழக்கம்.
குழந்தை பாக்கியம் வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்காண பெண்கள், இங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று குழந்தை வரம் வேண்டி, ஆத்தீஸ்வரை தரிசனம் செய்து அங்குள்ள சிவனடியார்களிடம் அமுதுபடையல் பிரசாத உணவை மடிப்பிச்சையாக பெற்று அவற்றை அங்குள்ள சின்ன குழந்தைகளுக்கு ஊட்டியும் எஞ்சியதை தானும் உண்ணுவர். இந்த விழா 101 ஆண்டாக நேற்று காலை முதல் மாலை வரை சீராளன் ஊர்வலத்துடன் துவங்கி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்திய பின் ஒரு டன் அரிசி மற்றும் ஒரு டன் காய்கறி கொண்டு தயார் செய்யப்பட்ட அமுது படையலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அன்னதானத்தில் உணவருந்தினர். அதுபோல் குழந்தை பேறுக்காக பிரார்த்தனை செய்து கொண்ட நூற்றுக்கணக்காண பெண்கள், சிவனடியார்களிடம் அமுது படையல் உணவை மடிப்பிச்சையாக வாங்கி,குழந்தைகளுக்கு உண்டி விட்டு,உண்டனர்.