பதிவு செய்த நாள்
09
ஜன
2012
11:01
விழுப்புரம் : ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு பஞ்சமூர்த்திகளுகளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சோடோபச்சாரா தீபாராதனையைத் தொடர்ந்து, ஆனந்த தாண்டவமாடியவாறு வீதியுலா நடந்தது. சுவாமி கோவிலை வந்தடைந்தவுடன் நடராஜர், சிவகாமசுந்தரி திருவூடல் நிகழ்ச்சி நடந்தது.
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதனை முன்னிட்டு நடராஜர் மற்றும் சிவாகாமி சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனை நடந்தது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி சிவகாமி அம்மன், நடராஜர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நடராஜருக்கு புஷ்ப அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை நடராஜ பெருமானின் தரிசன விழா நடந்தது. காலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் நடராஜ பெருமான் அன்னை சிவகாமசுந்தரி மற்றும் மாணிக்க வாசக பெருமானுடன் கோபுர தரிசனத்தில் அருள் பாலித்தார்.
விக்கிரவாண்டி: ஆருத்ரா தரிசனத்தை யொட்டி விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.