தேவிபட்டினம் நவபாஷண கோயில் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2018 11:04
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நவபாஷண கோயில் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தேவிபட்டினத்தில் கடற்கரைப்பகுதியில் மூழ்கிய நிலையில் நவக்கிரக சிலைகள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் தங்கள் தோஷ நிவர்த்திக்காக கடலுக்குள் இருக்கும் நவக்கிரகங்களை தரிசனம் செய்ய கடல்பகுதியில் 20 மீட்டர் வரை நடை பாதை அமைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நவக்கிரக சிலைகள், கடல் நீரில் பாதி மூழ்கிய நிலையில் இருக்கும். பொதுவாக கடல் பகுதி காலையில் உள்வாங்கியும், மாலையில் தண்ணீர் அதிகரித்தும் காணப்படும். இந்தப்பகுதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்படும். ஏப்., 21 முதல் கடல் சீற்றம் காரணமாக கடல்சார் தகவல் மையம் அறிவித்த எச்சரிக்கைப்படி, நவபாஷண கோயில் ஏப்., 21 காலை 8:30 மணிக்கு மூடப்பட்டது. 24 ம் தேதி வரை இந்த எச்சரிக்கை நீடிப்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்பட்டுள்ளது. நவக்கிரகங்களின் தரிசனத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. தேவிபட்டினம் நவபாஷண கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.