மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நாளை இரவு 7:40 மணிக்கு மேல் 8:04 மணிக்குள் நடக்கிறது.இக்கோயில் விழா ஏப்., 18 கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்காக இம்மண்டபத்தை வண்ண மலர்கள், வெட்டி வேர் மூலம் அலங்காரம் செய்து வருகின்றனர். மீனாட்சி அம்மனிடம் இருந்து கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை சமர்ப்பிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதன்படி மதுரையில் நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடப்பதாக ஐதீகம். ஏப்., 26ல் மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், ஏப்., 27ல் காலை 9:05 மணிக்கு மேல் 9:29 மணிக்குள் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், ஏப்., 28 காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.