பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
12:04
ஈரோடு: வனபத்ர காளியம்மன் கோவில், குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஈரோடு மண்டப வீதி, உப்புகிணறு சந்து, குண்டத்து வனபத்ரகாளியம்மன், ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில், குண்டம் விழா, கடந்த, 17ல் தொடங்கியது. நேற்று, தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கோவில் கும்பம், காரைவாய்க்காலில் இருந்து, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழிநெடுகிலும் நின்ற பக்தர்கள், கும்பத்துக்கு திருஷ்டி கழித்து, பூசணி உடைத்து வழிப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட, 12 அடி நீள குண்டத்தில், பூசாரி சுந்தரராஜன், முதலில் தீ மிதித்து, தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து, ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க, தீ மிதித்தனர். அதை தொடர்ந்து, பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. மாலையில் அம்மன் திருவீதி உலா, இரவில் வாய்க்காலில், கும்பம் விடும் நிகழ்ச்சி நடந்தது.