பதிவு செய்த நாள்
28
ஏப்
2018
01:04
தேனி: தேனியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் அரப்படிதேவன்பட்டியில், வயல் பகுதியில் அழகுற அமைந்துள்ளது சூரியபகவான், ருத்ரன் பூலிங்கம் கோயில். நுழைவாயிலில் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும் 600 அடி குகை வரவேற்கிறது. அதற்கு முன் காட்சி தருகிறார் வலம்புரி செல்வநாயகர். ஐந்து தலை நாகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குகையின் மத்தியப் பகுதியில் கருவறை செல்லும் சிறிய குகை ஆரம்பமாகிறது. அதற்கு முன் வள்ளி தெய்வானை சமேத முருகன், ஏழு கன்னிமார் சிலைகள், கன்னி மூல கணபதி, வில்வ மரத்தால் ஆன 2 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதன் அருகில் இமயமலை கேதார்நாத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பனிலிங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருவறை செல்லும் குகையின் வழியே குனிந்து சென்றால் அர்த்த மண்டபத்தில் ஆறு அடி உயரத்தில் சிவபெருமான் திருவுருவங்கள் கொண்ட சிலையும் நந்தி சிலையும் உள்ளன. அதன் பின் சித்தர் யாகவேள்வி மண்டபமும், பிரம்மாண்ட ஐந்து தலை நாகங்கள் ஐந்து சூழ முன்றடி ருத்ரன் பூலிங்கம் மூலவர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மூலவரை சுற்றி ஐந்து நாகங்கள் காத்துள்ளது போல் கருவறை உள்ளது.
சித்தர் முத்துக்கல்யாணி கூறியதாவது: மூலவர் 3 அடியில் அமைக்கப்பட்டுள்ளது. மேல்பகுதி 1,008 பன்முக ருதராட்சங்களாலும், கீழ் பகுதி 108 சிவன் மலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய மூலிகைகளை வைத்து செய்யப்பட்ட நவபாஷாணம் கீழ்புறத்தில், நிர்மாணிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டார். 2009ல் பிரதிஷ்டை செய்தோம். மூலவர் நெற்றிக்கண் பூரணத்துவம் நிறைந்தது. தினசரி சூரிய ஒளி அவரின் மேல் படும் படி கோயிலின் கட்டுமானத்தை அமைத்துள்ளோம், என்றார். தினமும் பூஜைகள், பிரதோஷ பூஜைகள் நடக்கின்றன. பரதம், யோகப் பயிற்சிகளை பயிற்றுனர் ராஜாமோகன் கற்றுத்தருகிறார். மேலும் விபரங்களுக்கு 94874 39263 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.