ஆண்டிபட்டி: மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நேற்று மாலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப். 30 ல் நடக்கிறது. இதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திறந்து விடப்பட்ட நீர் இன்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 850 கன அடியாக குறைக்கப்பட்டு, நாளை மாலை 6:00 மணிக்கு 300 கன அடியாக குறைக்கப்படும். 30 காலை நீர் வெளியேற்றம் நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். அணை நீர்மட்டம் 37.83 அடியாக (மொத்த உயரம் 71 அடி) , நீர் வரத்து வினாடிக்கு 70 கன அடியாக இருந்தது. குடிநீருக்காக வழக்கம்போல் வினாடிக்கு 48 கன அடி நீர் வெளியேறுகிறது.