பதிவு செய்த நாள்
28
ஏப்
2018
02:04
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், சுந்தரமூர்த்தி நாயனாரால், தேவார பாடல் பெற்ற கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையாகவும், முதலையுண்ட பாலகனை மூர்த்தி நாயனார் மீட்ட தல வரலாறு நடந்த திருத்தலமாகவும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.தமிழகத்திலேயே, மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பை பெற்ற இக்கோவிலில், சித்திரை தேர்த்திருவிழாவில் நேற்று அவிநாசியப்பர் தேரோட்டம் நடந்தது. காலை, 10:15 மணிக்கு, தேர்வடம் பிடித்தல் துவங்கியது.கவுமார மடாலய ஆதீனம் குமரகுருபர சுவாமி உள்பட பலர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். அதன்பின், பக்தர்கள், ஓம் நமசிவாய என கோஷமிட்டு தேர் இழுத்தனர்.கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தேர் வடம் பிடித்து, இழுத்து, மதியம், 2:01 மணிக்கு நிலை சேர்த்தனர்.