பதிவு செய்த நாள்
30
ஏப்
2018
12:04
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், திருத்தேரில் கோலாகலமாக வீதியுலா சென்றார்.இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 23ல் கோலாகலமாக துவங்கி, நாள்தோறும், காலை, இரவு என, பல்வேறு உற்சவ சேவைகள் நடக்கின்றன. ஏழாம் நாள் முக்கிய உற்சவமாக, நேற்று, சுவாமி, திருத்தேரில் கோலாகலமாக வீதியுலா சென்றார். கோவிலில், காலை தின வழிபாடு, ரத பிரதிஷ்டை ஹோமம் என நடைபெற்று, ராஜ அலங்கார சுவாமி, தேவியருடன், காலை, 6:20 மணிக்கு, அலங்கார திருத்தேரில் எழுந்தருளினார். பூதத்தாழ்வார், அவருக்கு, மாப்பிள்ளை மரியாதை செலுத்தி அளித்த ஆடை சாற்றி வழிபட்டு, நாலாயிர திவ்விய பிரபந்த, வேதபாராயண, மங்கல இசை முழங்கி, 8:30 மணிக்கு, தேர், நிலையிலிருந்து புறப்பட்டது.பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன், ராஜ வீதிகளில், தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்று, சுவாமியை தரிசித்து வழிபட்டனர். வீதியுலா முடிந்து, தேர் நிலையை அடைந்து, சுவாமி கோவிலை அடைந்தார். மாலை, சுவாமிக்கு வசந்த திருமஞ்சன உற்சவம் நடந்தது. உற்சவ கட்டளைதாரரான ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகத்தினர், பக்தர்களுக்கு, காலை, பகலில், அன்னதானம் வழங்கினர். இணை ஆணையர், கே.பி.அசோக்குமார் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.