பதிவு செய்த நாள்
30
ஏப்
2018
11:04
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களான, அப்பம், அரவணைப் பாயசம் ஆகியவற்றின் தரம் மற்றும் சுவையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும் அனைவரும், இங்கு விற்பனை செய்யப்படும் பிரசாதங்களான, அப்பம் மற்றும் அரவணைப் பாயசத்தை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த பிரசாதங்களின் தரத்திலும், சுவையிலும் மாற்றங்கள் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள, மத்திய அரசு நிறுவனமான, மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தை, கோவில் நிர்வாகம் அணுகியது. திருப்பதி லட்டு மற்றும் பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்பில், பல மாற்றங்களை இந்நிறுவனம் ஏற்கனவே செய்துள்ளது. பிரசாதங்கள் தயாரிப்பில், மேலும் சுத்தமான நடைமுறைகளை பின்பற்றவும், சுவை மற்றும் நீண்ட நாள் கெடாமல் இருக்கவும், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஒப்பந்தம், அடுத்த மாதம் கையெழுத்தாக உள்ளது. அப்பம் மற்றும் அரவணைப் பாயசத்தில் செய்யப்பட உள்ள புதிய மாற்றங்கள், வரும் நவம்பரில் இருந்து அமலுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.