தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், சித்தரை 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தஞ்சாவூர் அடுத்த புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமைகளில் பால்குடம் எடுப்பது வழக்கம். அதன்படி அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டு குழு நலச்சங்கம் மற்றும் அன்னதான டிரஸ்ட் சார்பில், நேற்று சித்திரை 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அச்சங்கத்தின் மூலம், 12வது ஆண்டாக 1008 பால்குடம் எடுக்கப்பட்டது. புன்னைநல்லுார் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அங்கிருந்து பால்குடம் புறப்பட்டு புன்னைநல்லுார் நான்கு ராஜவீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானமும் இரவு சுவாமி புறப்பாடும் நடந்தது.