தேனி: ராஜசிங்கன் என்ற பாண்டிய மன்னன் வைகை வழியாக வந்து கொண்டிருந்தபோது வீரபாண்டி கோயிலை கண்டார். இக்கோயிலை அவரது ஆறாவது பாட்டனாரான வீரபாண்டிய மன்னன் கட்டினார். அவர் மதுரையில் ஆட்சி செய்த போது, ஊழ்வினையால் தன் இரண்டு கண்களையும் இழக்க நேர்ந்தது. இறைவனிடம் முறையிட்டான்.கனவில் தோன்றிய இறைவன், வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, ’நீ வைகைக்கரை ஓரமாக செல். நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற கவுமாரி தவம் இருக்கிறாள். அங்கு சென்று அவளை வணங்கு. உன் கண்கள் ஒளிபெறும்’ எனக்கூறி அருளினார். அதன்படியே வீரபாண்டிய மன்னன், கவுமாரியை வணங்கி ஒரு கண்ணும், கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணும் ஒளி பெற்றார். அதனால் தான் இக்கோயில்களை கட்டி வழிபாடு செய்தார் என்பது தல வரலாறு. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடக்கிறது.