பதிவு செய்த நாள்
12
மே
2018
10:05
தேனி:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலை துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்காக ஏப்.18ல் கொடிக்கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் துவங்கின. முக்கிய எட்டு நாட்கள் திருவிழா மே 8 ல் துவங்கியது.அதன்பின், மலர் விமான பல்லக்கு, முத்துப்பல்லக்கு, நேற்று முன்தினம் புஷ்பப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை 4:30 மணிக்கு தேரோட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையாளர் பச்சையப்பன், கோயில் முறைதாரர்கள் குபேந்திரபாண்டியன், ராஜமாணிக்கம், ரநிர்வாகிகள் முன்னிலையில் பூசாரி காமுத்துரை சிறப்பு பூஜைகள் செய்தார். பின், கவுமாரியம்மன் தேரில் எழுந்தருளி னார்.
மாலை 5:28 மணிக்கு தேரோட்டம் துவங் கியது. கிழக்கு ரதவீதியில் நடந்த தேரோட்டத்தை கலெக்டர் பல்லவிபல்தேவ், எஸ்.பி., பாஸ்கரன், அறநிலையத்துறை இணை ஆணையாளர் வடம் பிடித்து துவக்கினர். இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், தேனி எம்.பி.,பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ., ஜக்கையன், கவுமாரி நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுரேஷ், சுதாகர், மதுரை காமராஜ் பல்கலை தொலை துார கல்வி மையத்தின் இயக்குனர் நாராயணபிரபு, கணபதி சில்க்ஸ் இயக்குனர் பாலசுப்ரமணி, அ.தி.மு.க., நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். இன்று தெற்கு ரதவீதியிலும், நாளை மேற்கு ரதவீதியிலும், அதற்கடுத்த நாளில் வடக்கு ரதவீதியிலும் தேரோட்டம் நடக்க உள்ளது.