பதிவு செய்த நாள்
16
மே
2018
03:05
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: கரூர், மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த, 13ல் துவங்கி, ஜூன், 10 வரை நடக்கிறது. அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மற்றும் கம்பம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் வரும், 28, 29, 30ல் நடக்கின்றன. அப்போது, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவர். கம்பம் ஆற்றில் கம்பம் விடும் பகுதியில், பொதுமக்கள் குளிப்பதற்கு செயற்கை நீரூற்று அமைக்க, குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் தொட்டிகள், கழிவறைகள் அமைக்கப்படும். இதற்காக, நகராட்சி நிர்வாகம் மூலம் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும், தற்காலிக மின்விளக்குகள், சாலையோரங்களில் சவுக்கு மரங்களை கொண்ட தற்காலிக தடுப்புகள் அமைக்கப்படவுள்ளன. தேவையான அளவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், போக்குவரத்து வழித்தடத்தை மாற்றி அமைப்பதற்கும் நடவடி க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் மூலம் கண்காணித்து, தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் எஸ்.பி., ராஜசேகரன், டி.ஆர்.ஓ., சூரியபிரகாஷ், கலெக்டர் நேர்முக உதவியாளர் செல்வசுரபி உட்பட பலர் பங்கேற்றனர்.