பதிவு செய்த நாள்
22
மே
2018
01:05
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், கால பூஜைகளில் மாற்றமில்லை. விசேஷ நாட்களில் அபிஷேகம் மட்டும், கால பூஜைக்கு முன்னதாக நடக்குமென, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் ஆறு கால பூஜை, பல நூறு ஆண்டுகளாக நடக்கிறது. இதில் செவ்வாய்கிழமைகளில் கூட்டம் அதிகம் வருகிறது. இதனால் அன்று மட்டும் காலை, 7:00 மணிக்கு நடக்கும் விளாபூஜையை முன்னதாக நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக இம்முறை கடைபிடிக்கப்பட்டது. ஆனாலும், ஆண்டாண்டு காலமாக நடக்கும் பூஜை முறையை, முன்னதாக நடத்த, விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில், காலபூஜை நேர மாற்றம் குறித்து, கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. செயல் அலுவலர் அருள்குமார் தலைமை வகித்தார். அதிகாரிகள், கோவில் தலைமை அர்ச்சகர் உள்பட அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். தினமும் காலை, 7:00 மணிக்கு நடக்கும் பூஜையில், எந்த மாற்றமும் இல்லை. விசேஷ நாட்கள், செவ்வாய்க்கிழமைகளில் மட்டும், அபிஷேகம் காலை, 6:00 மணிக்கு மேல், 6:30 மணிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டது. மார்கழி மாதம் முழுவதும், மார்கழி மாத விழாக்குழுவினர் நடத்தும் பூஜையும், இதுவரை நடந்த நேரத்திலேயே, தொடர்ந்து நடக்குமென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.