வைகாசி மாதத்தில் சந்திரன் தன் முழு ஆற்றலுடன் பவுர்ணமியாக விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதத்திற்கு “வைசாகம், வைகாசி” என பெயர் வந்தது. இந்த பவுர்ணமி நன்னாளை “வைகாசி விசாகம்” என்று கொண்டாடுகிறார்கள். முருகப்பெருமான் அவதாரம் இந்நாளில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. விசாகத்தில் அவதரித்ததால்“விசாகன்” என்று முருகனுக்குப் பெயருண்டு. “வி” என்றால் “பறவை” (மயில்), “சாகன்” என்றால் “சஞ்சரிப்பவன்”. “மயில் மீது வலம் வருபவர்” என்பது பொருள். முருகனுக்கு மயில் வாகனமாக இருப்பது அசுரன் சூரபத்மனே. பகைவனுக்கும் அருள்புரியும் வள்ளலாக விளங்குபவர் முருகன் மட்டுமே. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்வர்.