பதிவு செய்த நாள்
29
மே
2018
01:05
வாழப்பாடி: வாழப்பாடி அருகே பேளூரில், அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலசுவாமி கோவிலில், நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. காலை, 9:00 மணியளவில் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மேளதாளம் முழங்கிட ரதத்தில் ஏற்றப்பட்டனர். 10:30 மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்டிலுள்ள, தேர் நிலை நிறுத்துமிடத்திலிருந்து திருத்தேர் புறப்பட்டு, வாழப்பாடி ரோடு, அயோத்தியாப்பட்டணம் ரோடு வழியாக ஊர்வலமாக வந்து, மீண்டும் தேர் நிலை நிறுத்தப்பட்டது. வடம் பிடித்தல் நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
* சேலம், காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், முருகன் அவதரித்த திருநட்சத்திரமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில், மயில்வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய கந்தசாமி சிறப்பு அலங்காரத்துடன், கோவிலை சுற்றி வலம் வந்தார். சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் உத்தமசோழபுரம் பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலில், வள்ளி, தெய்வானை மற்றும் முருகன் உற்சவர் சிலைகளுக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. விசாகம் மற்றும் பவுர்ணமி இரண்டும் நேற்று ஒரே நாளில் வந்ததால், மாலை பெரியநாயகி அம்மன் சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி கோவில் வலம் வந்தார்.
* ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் நேற்று, வைகாசி விசாகத்தையொட்டி, முருகனுக்கு காலையில், அபி?ஷகம், தீபாராதனை, அர்ச்சனை, அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ராஜ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர் வெள்ளை விநாயகர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில்களிலும் கொண்டாடினர்.