பதிவு செய்த நாள்
29
மே
2018
01:05
சென்னிமலை: முருகன் கோவில்களில், வைகாசி விசாக விழா, நேற்று கொண்டாடப்பட்டது. முருகன் பிறந்த நாளான, வைகாசி விசாக திருவிழா, முருகன் கோவில்களில் வழக்கமான உற்சாகத்துடன், நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில், யாகம், சங்கு பூஜை மற்றும் தீர்த்தஅபிஷேகம் நடந்தது. முன்னதாக அருணகிரிநாதர் மடம், கிருத்திகை விசாக குழுவினர், 62ம் ஆண்டாக, காவிரி நதி புனித தீர்த்தம் சுமந்து, கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து கலச ஸ்தாபனம், 108 சங்கு ஸ்தாபன ஜெபம், மகா தீர்த்த அபி?ஷகம், சந்தன காப்பு அலங்காரம், புஷ்ப கொட்டாரம் நடந்தது. மகா தீபாராதனையை தொடர்ந்து, சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* ஈரோடு, திண்டல்மலை முருகன் கோவிலில், காலையில் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலையில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் சுமந்து ஊர்வலம் சென்றனர்.
* அந்தியூர் அருகே, ஆப்பக்கூடல் நால்ரோட்டில், கவுந்தப்பாடி சாலையில் உள்ள, கணேச பாலதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலுக்கு, பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து திரளான பக்தர்கள் வந்தனர். அபிஷேகத்தை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சுவாமி ராஜ அலங்காரத்தில், ஆப்பக்கூடலில் வீதியுலா சென்றார். இதேபோல் அந்தியூர், வெள்ளித்திருப்பூர், அத்தாணி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், வைகாசி விசாக திருவிழா களை கட்டியது.
* காஞ்சிக்கோவில், குமரன்மலை, வேலாயுதசுவாமி கோவிலில், 108 வலம்புரி சங்காபிஷேகம், படிபூஜை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதன்பின், கிரிவலப் பாதையில், தேர் உலா நடந்தது. பக்தர்கள், வடம்பிடித்து தேர் இழுத்தனர். இதேபோல் திங்களூர், தோரணவாவி, அருள்மலை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் குவிந்ததால், கோவில்கள் களை கட்டின.