பதிவு செய்த நாள்
02
ஜூன்
2018
03:06
தர்மம் செய்வது குறித்து நபிகள் நாயகம் கூறியுள்ள கருத்துக்கள்... உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அல்லாஹ் சோதனை செய்வார். எனவே, வசதி இல்லாதவன் உங்களிடம் ஏதேனும் கேட்டால், அவனை விரட்டாதீர்கள். முடிந்ததை கொடுத்தனுப்புங்கள். அல்லது இனிய வார்த்தைகளி லாவது பதில் சொல்லுங்கள். ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு அல்லாஹ்வின் கருணையே காரணம். ஒருவர் தர்மம் செய்யாமல் கஞ்சத்தனம் செய்கிறார் என்றால் அல்லாஹ்வின் நம்பிக்கையை அவர் இழந்து விட்டார் என்று அர்த்தம் தர்ம சிந்தனை வரவில்லை என்றால் பயப்படுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் செய்ய மறந்த தர்மத்தின் காரணமாகவே, நீங்கள் இப்போது கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். தர்மத்தால் செல்வம் அழிவதில்லை. தர்மம் செய்ய கையை நீட்டும் போது வாங்குவோரின் கரத்தில் விழுவதற்கு முன், அது அல்லாஹ்வின் கரத்தில் விழுந்து விடுகிறது. இறைவன் அதை ஏற்றுக்கொண்டு, கொடுத்தவருக்கு பாவமன்னிப்பை அளிக்கிறார்.
ஒவ்வொரு காலையும் இரண்டு வானவர்கள் பூமிக்கு வருவர். ஒருவர், “இறைவா! உன் பாதையில் செலவு செய்வோருக்கு உரிய நன்மையை அருள்வாயாக,” என்பார். மற்றொருவர், “இறைவா! உன் பாதையில் செலவு செய்யாதவருக்கு அழிவைக் கொடுப்பாயாக” என்றும் இறைவனிடம் கோரிக்கை வைப்பார். தர்மம் செய்யும் போது வருகின்ற துன்பம் அல்லாஹ்வின் கருணைக்கு அறிகுறி. எண்ணங்களை பொறுத்தே செயல்கள் அமைகின்றன. வாழும்போது தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்துவிட்டு, மரண வேளையில் கொடை வள்ளலாக மாறும் மனிதனை பார்த்து இறைவன் கோபப்படுகிறான். பாவியாக இருந்தாலும், தர்மம் செய்ய துவங்கி விட்டால் அவன் அல்லாஹ்வின் தோழன். தொழுகையாளியாக இருந்து கொண்டு தர்மம் செய்யாத ஒரு கஞ்சன் அல்லாஹ்வின் எதிரி.
நீங்கள் செய்கின்ற தர்மம் உங்கள் முன்னோரின் பாவத்தையும், இனி வரும் சந்ததியின் துன்பத்தையும் போக்குகின்றது. அனாதை குழந்தைகளுக்கு இரக்கத்துடன் உதவுங்கள். ஏழை, எளியவர்களுக்கு அன்புடன் உணவு கொடுங்கள். கருணை கொண்டவன் இருக்கும் இடம் சொர்க்கம். கஞ்சத்தனம் கொண்டவன் இருக்கும் இடம் நரகம். கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகியன நம்மை நாசப்படுத்திவிடும். பணக்காரனிடம் கஞ்சத்தனமும், ஏழையிடம் தற்பெருமையும், மக்கள் தலைவர்களிடம் அநியாயமும், முதியோர்களிடம் உலக ஆசையும் இருப்பதை அல்லாஹ் வெறுக்கிறான்.