‘அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான்’. அதாவது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐம்புலன்கள் கட்டுப்படும் போது, மனம் நிலைபெற்று, ஞானத்தை தேடத் வங்குகிறது. புலன்களின் கட்டுப்பாட்டுக்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம். பட்டினியாக இருப்பதல்ல விரதம். எந்த உணவை, எப்போது சாப்பிட்டு, எப்படி இருக்க வேண்டும் என்பது தெரிந்து முறையாக கடைபிடிப்பதே விரதம். ‘உணவே மருந்து’ என்பதை மறந்து கண்டதையெல்லாம் சாப்பிட்டு, வியாதிகளை வளர்க்கிறோம். பின் உணவு கட்டுப்பாட்டிற்காக, ‘டயட்டீசியன்களை’ நாடுகிறோம். இந்த சிக்கலை தவிர்க்கவே, முன்னோர்கள் விரதம் மேற் கொண்டனர். 15 நாளுக்கு ஒருமுறை வயிற்றை காலியாக வைக்க வேண்டும் என்பதற்காகவே, அமாவாசை, பவுர்ணமி நாளில் விரதமிருக்க வலியுறுத்தினர். இதனால், வயிறு சுத்தமாகிறது. குடல்களின் சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலம், ஜலம் சரியாக வெளியேறுகிறது. தூக்கம் சுகமாகிறது. ‘அடேங்கப்பா விரதத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா...?’ என ஆராய்ச்சி செய்யாமல் அதை கடைபிடிக்க ஆரம்பியுங்கள்... இனி உங்கள் ஆரோக்கியம் உங்கள் வாயில்!