சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலை சுற்றி குப்பை, திறந்த வெளி கழிப்பிடம் போன்றவைகளால் பக்தர்கள் சுகாதாரக்கேட்டில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திவ்ய தேசங்களில் 45வது கோயிலாக விளங்கும் இக்கோயில். 5.20 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வெளிமாநில பக்தர்கள் உட்பட ஏராளாமானோர் தினமும் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். புகழ்பெற்ற இக்கோயிலில் அடிப்படை வசதிகள் குறைவு. ஒரு பகுதியில் மட்டுமே கழிப்பறை உள்ளது. அதுவும் ஒதுக்குபுறமாக இருப்பதால் பக்தர்கள் கண்களில் தென்படுவதில்லை. காலணிகள் விட வசதி இல்லை. கிழக்கு பகுதி நுழைவு வாயில் படிகட்டின் கீழே சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் குப்பை கொட்டி வைத்துள்ளனர்.கோயிலை சுற்றி திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது பக்தர்களை அவதிக்குள்ளாக்கிறது. பக்தர்கள் நலன் கருதி கோயிலை சுற்றி சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாசி படர்ந்த அவலம்: கோயில் நுழைவுவாயில் அருகே பாபநாச தீர்த்தம் தெப்பம் வடிவில் உள்ளது. பாறைகள் சூழ்ந்து அழகிய காட்சியாக அமைந்திருக்கிறது. இதில் குளித்தால் செய்த பாவங்கள் போகும் என்பது ஐதீகம். இப்பெயர் பெற்ற தீர்த்தம் 15 ஆண்டுகளாக யாருக்கும் பயனளிக்காமல் பூட்டியே கிடக்கிறது.இதன் நுழைவு வாயில் இருக்கும் கல் மண்டபம் சேதமாகிஇடிந்து விழுகிறது.கழிவு நீர் கலப்பதால் பாசிபடர்ந்து நாற்றம் வீசுகிறது. கோயிலின் புனிதம் கெடுவதோடு நிலத்தடி நீருக்கும் பாதிப்பை தருகிறது. கலையரசன், உரிமையாளர், கவரிங் கடை
தயங்கும் அதிகாரிகள்: குறுகிய இடத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகராட்சி திருத்தங்கல். நகர் விரிவாக்கத்தில் முதன்மையாக உள்ளது. தினமும் குடியிருப்பு வீடுகள் பெருகி வருகின்றன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இல்லை. அதிகாரிகளிடம் முறையிட்டாலும் பயனில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் காலதாமதம் செய்வதால் அதிகாரிகள் கை ஓங்கி உள்ளது. எந்த புகாருக்கும் மதிப்பளிப்பதில்லை. வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். பழனிச்சாமி , சமூக ஆர்வலர்.
இஷ்டத்திற்கு ஆக்கிரமிப்பு: ரதவீதி, விருதுநகர் ரோடு, வெள்ளையாபுரம் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன. பல கடைகள் நிரந்தர ஆக்கிரமிப்பு கடைகளாக நிறுவப்பட்டுள்ளன. மேற்கூரை, வாறுகால் பாலம் என இஷ்டத்திற்கு பொது சொத்தினை ஆக்கிரமித்து வருகின்றனர். முக்கிய நகர் பகுதிகளில் வாறுகால் துப்புரவு மோசமாக உள்ளது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு கொசு உற்பத்திக்கும் வழிவகுக்கின்றன. சரவணக்குமார், தனியார் ஊழியர் .
20 அடியான 35அடி ரோடு: பெரியார் சிலையில் இருந்து மாரியம்மன் கோயில் வரை கடைகளின் மேற்கூரை, ஸ்டால்கள் அமைத்து ரோட்டினை குறுகிய இடத்திற்கு கொண்டு சென்று விட்டனர். 35 அடி ரோடு 20 அடி ரோடாக மாறிப்போனது. அண்ணா சிலை அருகே ஆட்டோ நிறுத்தம் செயல்படுகிறது.இங்கு தான் வெளியூர் பஸ்கள் நின்று செல்கின்றன. காலை, மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே போல் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருப்பதால் இந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்தும் நடக்கிறது.முனியசாமி, சமூக ஆர்வலர்.