பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள சொக்கனூர் மாலை கோவிலில், மாடுகளை ஊர்வலமாக அழைத்து கிருஷ்ணனை வழிபட்டனர்.பூப்பொங்கலை முன்னிட்டு, சொக்கனூர் மாலை கோவிலில், கிருஷ்ணனனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பின், கல்லாபுரம் பகுதியில் இருந்து மூன்று மாடுகளுக்கும், ஒரு கன்றுக்குட்டிக்கும் மாலை அணிவித்து தாரை தப்படையுடன் மாலை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு, மாடுகளுக்கு "கோ பூஜை செய்யப்பட்டது. சொக்கனூர் கிராமத்தைச் சுற்றியுள்ள வீரப்பகவுண்டனூர், பொட்டையாண்டிபுரம்பு, வடபுதூர், முத்துக்கவுண்டனூர், கிணத்துக்கடவு உட்பட பல கிராமங்களில் இருந்தும், பக்தர்கள் மாலை கோவிலுக்காக நேர்ந்துவிடப்பட்ட மாடுகளை அழைத்து வந்து "கோ பூஜை செய்தனர். இதனால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாடு மற்றும் மனிதன் போன்ற உருவ பொம்மைகளும் விற்பனை செய்யப்பட்டதால், நேர்த்தி கடன் செலுத்துபவர்கள் இவற்றை வாங்கி கோவில் முன்பு வைத்து கிருஷ்ணனை வழிபட்டனர். சொக்கனூர் மூலக்கடை மற்றும் கோதவாடி மாலை கோவிலிலும் திருவிழா நடந்தது. பொன்மலை வேலாயுதசாமி கோவில்: பூப்பொங்கலன்று கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பின், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். மலை கோவில் மேல் பூத்திருக்கும் பூக்களை பறித்தும், வீடுகளில் மார்கழி மாதம் முழுவதும் சாணப் பிள்ளையார் பிடித்து வைத்துள்ளதை கொண்டு வந்தும் கும்மியடித்து பாட்டு பாடிய பின்பு வேலாயுதசாமியை தரிசனம் செய்துவிட்டு, பின்பு மலைமேல் உள்ள சுனையில், சாணப்பிள்ளையாரை கரைத்தனர். கிராமங்களில் உள்ள விவசாயிகளும் குடும்பத்துடன் இக்கோவிலுக்கு வந்து வேலாயுதசாமியை வழிபட்டனர்.