பதிவு செய்த நாள்
20
ஜன
2012
11:01
காஞ்சிபுரத்தில் பழமை வாய்ந்த கங்கைகொண்டான் மண்டபம் மேற்கூரை பெயர்ந்து, கீழே இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பது, பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய காஞ்சிபுரத்தில் கங்கைகொண்டான் மண்டபம், ஜி.கே.மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில், அழகிய ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் நடைபெறும் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின்போது, பெருமாள், கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருள்வது வழக்கம். அதேபோல் காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர் கோவில் உற்சவங்களின்போதும், சுவாமி மண்டபம் முன் நின்று செல்வது வழக்கம். இம்மண்டபம், வரதராஜப் பெருமாள் கோவில் பராமரிப்பில் இருந்து வருகிறது. மண்டபத்திலுள்ள ஆஞ்சநேயருக்கு, தினமும் வழிபாடு நடைபெறும். பக்தர்கள் ஏராளமானோர் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில், மண்டபத்தின் உள்ளே அலங்கார கோவில் குடை தயாரிப்போர் அமர்ந்து, குடை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவர். அவர்கள் வாடகையாக, குறிப்பிட்ட தொகையை, கோவிலுக்கு செலுத்தி வருகின்றனர்.இச்சூழலில், மண்டபம் போதிய பராமரிப்பின்றி சீரழியத் துவங்கியது. இரு தினங்களுக்கு முன், மண்டபத்தின் நுழைவாயில் மேற்புறம் அமைக்கப்பட்டிருந்த, பெரிய கருங்கற்கள் சரியத் துவங்கின. அவை கீழே விழாமல் இருக்க, தற்காலிகமாக சவுக்கு கட்டைகளால் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறமும் மேற்கூரை சிதிலமடைந்துள்ளது. மண்டபம் மேற்கூரை இடிந்து விழுவதற்கு முன், மண்டபத்தை சீரமைக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி கூறும்போது, "மண்டபத்தை சீரமைக்க, மதிப்பீடு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் மண்டபம் சீரமைக்கப்படும் என்றார்.