பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
12:06
திருக்காரணி: திருக்காரணி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பிரையாங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது திருக்காரணி கிராமம். இங்குள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, 20ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு புண்ணியாவாசனம் மற்றும் வாஸ்து ஹோமமும், அன்று மாலை, 7:00 மணிக்கு புதிய பிம்பங்கள் கரிக்கோலமும், யாகசாலை பூஜை ஹோமமும் நடந்தது. கும்பாபிஷேக நாளான, நேற்று காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை, 8:00 மணிக்கு யாத்ராதான சங்கல்பமும், காலை, 9:45 மணிக்கு கலச புறப்பாடும் நடந்தது. அதன்பின், காலை, 10:20 மணிக்கு கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சாற்றுமறையும் நடந்தது. நேற்று இரவு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும், மலர் அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடும் நடந்தது. திருக்காரணி, பிரையாங்குப்பம், ஆட்டுப்பாக்கம், கடம்பத்துார், விடையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.