குன்னுார்:குன்னுார் ’மவுன்ட் பிளசன்ட்’ பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், 20ம் ஆண்டு தேர் திருவீதி உலா நடந்தது. குன்னுார் அருகே மவுன்ட் பிளசன்ட் பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன், திருவிழா துவங்கியது. தொடர்ந்து ரயில்வே காலனி முனீஸ்வரர் கோவில் கமிட்டி சார்பில் அபிஷேக அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தன. முனீஸ்வரர் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க சீர்வரிசை மற்றும் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, 22ல், வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து அபிஷேக பொருட்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தேர் ஊர்வலம் கோவிலில் துவங்கி, மவுன்ட் பிளசன்ட், மோர்ஸ்கார்டன், முத்தாலம்மன்பேட்டை, ஓட்டுப்பட்டறை மூணுரோடு வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.