தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் பெரியநாயகி திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2018 11:06
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் பெரியநாயகி சமேத பெருவுடையாருக்கு திருக்கல்யாண வைபவம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெரியநாயகி சமேத பெருவுடையாருக்கு திருக்கல்யாண வைபவம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இது போல் இவ்வாண்டும் நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பழங்கள்,குங்குமம், மஞ்சள் திருமாங்கல்ய சரடு,வளையல்,கண்ணாடி, ரீப்பன், வெற்றிபாக்கு போன்ற சீர்வரிசை எடுத்து சொக்கநாதர் சன்னதியில் இருந்து நடராஜர் சன்னதி முன் மண்டபத்தில் கொண்டு வந்து வைத்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரகங்கள் முழங்க, மாப்பிளை அழைப்பு உட்பட சம்பிரதாய சடங்குகள், ஹோமம் நடந்து முடிந்து பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு தீபராதனை காண்பிக்கப்பட்டன. அதை தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலாத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அனைவருக்கும் திருக்கல்யாண பிரசாதங்களும், திருமணம் நடக்காத இளம் பெண், ஆண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலையை அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. அப்படி அணிவிப்பதால் அடுத்தாண்டு வரும் போது அவர்களுக்கு திருமணம் நடந்தே தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே, திருக்கல்யாணத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டு சென்றனர். விழா முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.