பதிவு செய்த நாள்
27
ஜூன்
2018
12:06
பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், தேர் திருவிழா நேற்று நடந்தது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், கடந்த 2014ம் ஆண்டு திருப்பணியும், கோவிலுக்கு புதியதாக தேர் செய்யும் பணியும் நடைபெற்று வந்தது. கடந்த 2015ம் ஆண்டு தேர் செய்யும் பணி முமுமை பெற்று வெள்ளோட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் திருப்பணிகள் முழுமை பெற்று, கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பின், இக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.
கடந்த 24ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று நடந்தது. கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு எம்.எல்.ஏ., ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். வேதாம்பிகைசமேத மூலநாதர் சுவாமி மாட வீதிகளில் தேர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 7.15 மணிக்கு துவங்கிய தேரோட்டம் இரவு 7.15 மணியளவில் நிலையை வந்தடைந்தது. விழாவில், துணை மாவட்ட ஆட்சியர் உதயக்குமார், இந்து அறநிலையை துறை ஆணையர் தில்லைவேல், அரசு செயலர் சுந்தரவடிவேல், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, பாகூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மின்துறை உதவிப்பொறியாளர் கண்ணன் தலைமையிலானஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினர். ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.