பதிவு செய்த நாள்
29
ஜூன்
2018
06:06
சேலம்: சுகவனேஸ்வரர் கோவில் தேரை பாதுகாக்க, 4.62 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய இரும்பு தகர, ‘செட்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. சேலம், சுகவனேஸ்வரர் கோவில் தேர் சிதிலமடைந்ததால், 45 லட்சம் ரூபாய் செலவில், புது தேர் செய்யப்பட்டு, கடந்த ஜன., 22ல், தேரோட்டம் நடந்தது. பின், தேரடி வீதி, ராஜகணபதி கோவில் அருகே, தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை, வெயிலில் சேதமடைய வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், இரும்பு தகர ‘செட்’ அமைக்க, அரசிடம், பணம் கேட்டு அறிக்கை அனுப்பினர். அதன்படி, நான்கு லட்சத்து, 62 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்வீதியில், ‘செட்’ அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. செயல் அலுவலர் தமிழரசு கூறுகையில், ‘‘தேரை பாதுகாக்க, ‘செட்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி, ஜூலை, 2ல் முடியும். இதன்மூலம், மழை, வெயிலால், தேருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,’’ என்றார்.