பதிவு செய்த நாள்
30
ஜூன்
2018
11:06
மதுராந்தகம்: மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் தேர் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. ஏரிகாத்த ராமர் என அழைக்கப்படும், புகழ்பெற்ற, கோதண்டராமர் திருக்கோவில் மதுராந்கத்தில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு சில தினங்களுக்கு முன், கொடியேற்றத்துடன் துவங்கிய பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி, நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. தேரடித் தெருவிலுள்ள நிலையிலிருந்து, 10:00 மணிக்குப் புறப்பட்ட தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கோதண்டராமரைத் தரிசித்தனர்.
போலீஸ் பாதுகாப்பு போதாது : ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய இவ்விழாவில், நேற்று, போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை. இதனால், தேர் புறப்பட்டு சென்ற பிறகு, பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதே நேரம், அருகிலேயே இருந்த தனியார் மண்டபத்தில், 300 போலீசார், ரத்த தானம் அளித்தனர். தேர் அலங்காரம் சரியில்லை : மாவட்ட அளவில் மட்டுமல்லாது, தமிழக அளவிலும் பிரபலமானது இத்திருக்கோவில். அப்படியிருக்க, தேர் பவனி விழாவுக் காக தேரை இன்னும் சிறப்பான முறையில், மலர்களால் அலங்கரிக்கலாம் என்பது பக்தர்களின் ஆதங்கமாக இருந்தது. குறிப்பாக, அலங்கார வண்ணத் துணிகள், சாயம் போன பழைய துணியாகவே இருந்தது. பூக்கள் விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்திலும், தேரில் மலர் மாலைகளும் வெகு குறைவே.