தூத்துக்குடி சிவன் கோயிலில் பிப்.,7ல் தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2012 11:01
தூத்துக்குடி : தூத்துக்குடி சிவன் கோயிலில் பிப்ரவரி 7ம் தேதி தைப்பூச தெப்பத் திருவிழா நடக்கிறது. இதனையொட்டி தெப்பத்தை சுத்தம் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி சிவன்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தெப்பத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தைப்பூச தெப்பத் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி தெப்பத்தை சீர் செய்யும் பணிகள் கோயில் நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெப்பத்திருவிழா அன்று காலையில் சங்கரராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்மன் ஆகியோர் தெப்பக்குளம் விநாயகர் கோயிலுக்கு மேளதாளம் முழங்க அழைத்து செல்லப்படுவர். அங்கு சுவாமி, அம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடக்கிறது. பின்னர் மாலை 7 மணிக்கு விநாயகர், சங்கரராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்மன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தெப்பத்தை சுற்றி வலம் வருதல் நடக்கிறது. இதனை ஒட்டி தெப்பப் பகுதி மற்றும் சுவாமி வலம் வரும் தெப்பமும் மின் விளக்குகளால் ஜொலிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் பணியாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.