பதிவு செய்த நாள்
23
ஜன
2012
11:01
திசையன்விளை :உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தை திருவிழா வரும் 30ம் தேதி துவங்குகிறது. தென்மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலாகும். இக்கோயிலில் புதிதாக கலைநயமிக்க இரு தேர்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது தை திருவிழா வரும் 30ம் தேதி துவங்கி பிப்ரவரி 9ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவில் முதலாம் திருவிழா 30ம் தேதி காலையில் கொடிபட்டம் யானை மீது ஊர்வலம், மங்கள வாத்தியம், யதாஸ்தானத்தில் இருந்து சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை, வாணவேடிக்கை, தனுசு லக்கனத்தில் கொடியேற்றம், விநாயகர் வீதியுலா, மூலவர் உற்சவர் அபிஷேகம், உச்சிக்கால பூஜை ஆகியனவும், மாலையில் சமய சொற்பொழிவுகள், சாயரட்சை சிறப்பு அபிஷேகம், வெற்றிவேர் சப்பரத்தில் சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை வீதியுலா, சேர்க்கை தீபாராதனை ஆகியன நடக்கிறது. இரண்டாம் திருவிழா 31ம் தேதி முதல் 7ம் திருவிழா 5ம் தேதி வரை தினமும் மங்கள வாத்தியம், சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை, விநாயகர் வீதியுலா, மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம், உச்சிக்கால சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம், சாயரட்சை பூஜை, சுவாமி, அம்பிகை கஜ, அன்ன, இந்திர விமான, காமதேனு, குதிரை, கைலாய பர்வதம் ஆகிய வாகனங்களில் வீதியுலா, சேர்க்கை தீபாராதனை, மேளம், சமய சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடக்கிறது.
8ம் திருவிழா 6ம் தேதி சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட, உச்சிகால, சாயரட்சை பூஜைகள், விநாயகர் வீதியுலா, மூலவர், உற்சவர் சிறப்பு அபிஷேகம், கடற்கரை அரங்கில் 5004 சிவலிங்க பூஜை, சிறப்பு அபிஷேகம், சட்டம்கால் சப்பர வாகனத்தில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை பச்சைசாத்தி வீதியுலா, சேர்க்கை தீபாராதனை, மேளம், சமய சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. 9ம் திருவிழா 7ம் தேதி சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை, கோயிலில் இருந்து சுவாமி, அம்பிகை தேருக்கு புறப்பாடு, ரதாரோகணம், ரதோற்சவம், தேரோட்டம், தேர்நிலை நின்றவுடன் தீர்த்தவாரி, மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம், உச்சிக்கால சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம், சாயரட்சை பூஜை, ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பிகை வீதியுலா, வாணவேடிக்கை, மேளம், சமய சொற்பொழிவுகள், இன்னிசை அரங்கம், நகைச்சுவை நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. 10ம் திருவிழா 8ம் தேதி சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட, உச்சிகால, சாயரட்சை, ராக்கால பூஜைகள், விநாயகர் வீதியுலா, சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, கோயிலில் இருந்து சுவாமி, அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளல், தெப்ப உற்சவம், சேர்க்கை, தீபாராதனை, மேளம், கிளாரினட் இசை, சமய சொற்பொழிவுகள், நாட்டியாஞ்சலி ஆகியன நடக்கிறது. 11ம் திருவிழா 9ம் தேதி உற்சவசாந்தி, உதயமார்த்தாண்ட பூஜை, சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை மஞ்சள் நீராட்டு கோலத்துடன் ரத வீதியில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, சுவாமி, அம்பிகை, சண்டீகேசுவரர் சிறப்பு அபிஷேகம், சுவாமி, அம்பிகை, சண்டீகேசுவரர் ஆகியோருக்கு யதாஸ்தானத்தில் எழுந்தருள செய்து சேர்க்கை தீபாராதனை, உச்சிக்கால சிறப்பு பூஜை, மேளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றார். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமார் தலைமையில் உவரி போலீசார் செய்து வருகின்றனர். விழாவிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.