பதிவு செய்த நாள்
12
ஜூலை
2018
11:07
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில், ஜீயர் மடத்தின், 50வது பட்டமாக திகழ்ந்த ஸ்ரீரங்க நாராயண ஜீயர், உடல் நலக்குறைவால், நேற்று மாலை உயிரிழந்தார். பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்தி, தினசரி வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தவர் ராமானுஜர். வடக்கு கோபுரத்தின் அருகில், இவர் தங்கியிருந்து, சேவை செய்த மடம், ஜீயர் மடம் என அழைக்கப்படுகிறது. இந்த மடத்தின், 50வது பட்டமாக, ஸ்ரீரங்க நாராயண ஜீயர் இருந்தார். 89 வயதான இவர், ஜீயர் பொறுப்புக்கு வந்து, 28 ஆண்டுகள் ஆகின்றன. உடல்நலக் குறைவு காரணமாக, தூக்கமின்றி தவித்த அவரை, திருச்சி, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று மாலை, 3:20 மணியளவில், சிகிச்சை பலனின்றி, ஜீயர் உயிர்இழந்தார். இன்று, அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது. ஸ்ரீரங்க நாராயண ஜீயர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகப் பணிகள் மட்டுமின்றி, உலக நன்மைக்காக, பல்வேறு இடங்களில், யாகங்களை நடத்தியுள்ளார். சமீபத்தில், ராமானுஜரின், 1,000வது ஆண்டு விழாவையும், சிறப்பாக நடத்தினார்.