பதிவு செய்த நாள்
12
ஜூலை
2018
11:07
கோவை: குனியமுத்துார் இடையர்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று, சக்தி கரக வீதியுலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கின்றன. குனியமுத்துார்,
இடையர்பாளையத்தில் அமைந்துள்ளது, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில். இக்கோவில் திருவிழா, ஜூன் 27ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது;
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது; நாளை மறுபூஜையுடன் நிறைவடைகிறது. நேற்று முன்தினம் கோவில் விழா கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில், பேரூரில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தீர்த்தக்குடம் எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று சக்தி கரகம் வீதியுலாவும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. பிற்பகலில், அம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் வழிபாடும், மாலை , புலியாட்டம், சிலம்பாட்டமும் நடந்தன. இன்று காலை , 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரபூஜையும், மதியம், 12:00 மணிக்கு, முளைப்பாரி ஊர்வலமும், பிற்பகல், 3:00 மணிக்கு, சக்தி கரகம் வீதியுலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. நாளை மதியம், 12:00 மணிக்கு, மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.