பதிவு செய்த நாள்
24
ஜன
2012
11:01
கடையநல்லூர் :கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கல்லகநாடி அம்மன், முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் கல்லகநாடியம்மன், முப்புடாதியம்மன் கோயிலில் தை திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. நாள்தோறும் மண்டகபடிதாரர்களின் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சப்பர வீதியுலா நடந்தது. இத்திருவிழாவில் சிறப்பு பெற்ற தேரோட்டம் நேற்று நடந்தது. கோயிலில் இருந்து கற்பகசுந்தர விநாயகர் கோயில் தெரு, மிட்டாதாரர் தெரு, தேசிய நெடுஞ்சாலை வழியாக தேரோட்டம் நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள், இளைஞரணியினர், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்.ஐ.,க்கள் சிவன், முத்துலெட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.