வடமதுரை ஆடித்திருவிழாவில் தேர் இழுக்கும் நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2018 12:07
வடமதுரை:வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழாவில் தேர் இழுக்கும் நேரம் காலை நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஆடிமாத பவுர்ணமியையொட்டி இங்கு 13 நாள் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு திருவிழா ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிரவு துவங்கி திருவிழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 9:00 மணியளவில் மண்டகபடிதாரர்கள் சார்பிலான சிறப்பு வழிபாடும், அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 25ல் திருக்கல்யாணம், ஜூலை 27ல் திருத்தேரோட்டம் நடக்கிறது. வழக்கமாக தேரோட்டம் மாலை நேரத்தில் துவங்கி இரவு 8:00 மணியளவில் தேர் நிலைக்கு திரும்பும். கடந்தாண்டை போல இந்தாண்டும் தேரோட்ட நாளில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் ஜூலை 27 காலை 9:00 மணிக்கே தேரோட்டம் நடக்கிறது. மற்றொரு முக்கிய விழாவான பெருமாள் சுவாமி இரவு முழுவதும் வீதியுலா செல்லும் வசந்தம் முத்துபல்லக்கு வைபவம் ஜூலை 29ல் நடக்கிறது.