பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
01:07
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி திறப்பு விழா ஆகியவை, அரசு சார்பில் நடத்துவதற்காக முன்னேற்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆசியாமரியம் பேசியதாவது: கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை போற்றிடும் வகையில், ஆண்டு தோறும், ஆடி, 17, 18ல், தமிழக அரசு சார்பில், வல்வில் ஓரி விழா, கொல்லிமலையில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, ஆக., 2, 3ல், கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், ஊரக வளர்ச்சி, வேளாண், தோட்டக்கலை, போக்குவரத்து, காவல், பட்டு வளர்ச்சி என பல்வேறு துறை சார்பில், சாதனை விளக்க கண்காட்சி அமைக்கப்படுகிறது. வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சி அமைக்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அலுவலர்கள், தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகளை முழுமையாக செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. துணியிலான அல்லது எளிதில் மட்கக்கூடிய பொருட்களால் ஆன பைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, சப் - கலெக்டர் கிராந்தி குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.