பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
திருச்சி: திருச்சி உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலின், ஜோஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பு கோவிலான உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவில், 108 வைணவத் கோவில்களில் இரண்டாமிடம் என்ற பெருமையுடையது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நட்சத்திர கணக்குப்படி ஆனி அல்லது ஆடி மாதத்தில், ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் செய்யப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தங்கக் குடத்தில் நீர் எடுத்து, யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின் மூம்மூர்த்திகளான அழகிய மணவாளன், கமலவள்ளி நாச்சியார், உற்சவ நாச்சியார் ஆகியோருக்கு சிறப்ப திருமஞ்சனம் நடந்தது. ஜேஷ்டாபிஷேகத்தின் இரண்டாம் நாளான இன்று, சாதம் வடித்து, நெய், கீரை, முக்கனிகள் சேர்த்து, பெருமாள், நாச்சியாருக்கு அமுது படைக்கப்படும். இந்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதையொட்டி சிறப்புத் திருப்பாவடை நிகழ்ச்சி நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு, கமலவள்ளி நாச்சியார் கோவிலில் நேற்று முழுவதும் பக்தர்கள் தரிசனம் கிடையாது. இன்று மாலைக்கு பிறகே, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.