பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
01:07
செங்கல்பட்டு: மணப்பாக்கம் கன்னிகோவில் விழா நடைபெறும் பகுதியில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராமத்தில், பாலாற்றங்கரையில் புகழ்பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஆடி மாதம் துவங்கியதும், அனைத்து நாட்களிலும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து, அம்மனை வழிபடுவர்.இந்த ஆண்டு, ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கன்னியம்மனுக்கு, அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.முக்கிய விழாவாக, மூன்றாவது வெள்ளிக்கிழமை தீமிதி விழா நடைபெறும். இதில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர்.அந்நாளில், கடை மற்றும் வாகன நிறுத்த கட்டணம் உள்ளிட்டவைக்கு, வரி வசூலிப்பதில் மட்டும் குறியாக இல்லாமல், பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும், உள்ளாட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.