திருக்கனுார்: வாதானுார் சுந்தரேஸ்வரர் கோவிலில் சைவாதிகார சேவா சார்பில் விசேஷ ஹோமம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த வாதானுார் கிராமத்தில் மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வளாகத்தில் உள்ள பழமையான சிலைகள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.இதனையடுத்து, சைவாதிகார சேவா சார்பில், 15 பேர் கொண்ட குழுவினர், கடந்த 22ம் தேதி காலை முதல் கோவிலில் உழவாரப் பணியினை மேற்கொண்டனர்.இதில், பராமரிப்பு இன்றி இருந்த கற்சிலைகள் சுத்தம் செய்யப்பட்டது. இப்பணியின் போது கோவில் தனி அதிகாரி ராஜேந்திரன் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர். நேற்று முன்தினம் (23ம் தேதி) 9:00 மணிக்கு உலக நலன்வேண்டியும், கோவில் திருப்பணிகள் துவங்கி கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும் விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது.இதில், கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அரும்பார்த்தபுரம் பத்மாவதி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.