பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
01:07
திருப்பூர்: திருப்பூர் செல்லாண்டியம்மன் கோவில், ஆடிக்குண்டம் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள், பக்தி பரவசத்துடன், குண்டம் இறங்கி வழிபட்டனர். திருப்பூர், நொய்யல் நதிக்கரையில் உள்ள, செல்லாண்டியம்மன், நகரின் காவல் தெய்வமாக விளங்குகிறது. கோவிலின், 12ம் ஆண்டு குண்டம் திருவிழா, 13ல், பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையை தொடர்ந்து, குண்டம் திறக்கப்பட்டது. பரிவார மூர்த்திகள் அபிேஷகம், திருக்கல்யாணம், குண்டத்துக்கு அக்னியிடுதல் நடைபெற்றன. நேற்று காலை, 6:00 மணிக்கு, பூசாரி மற்றும் அருளாளர்கள், குண்டம் இறங்க துவங்கினர். தொடர்ந்து, பக்தர்கள், ‘அம்மா... தாயே பரமேஸ்வரி’ என்று கோஷத்துடன், குண்டம் இறங்கினர். சிகப்பு பட்டு உடுத்தி, சந்தன காப்பு அலங்காரத்துடன், தலையில் வெண்ணெய் சாற்றிய நிலையில், அம்மன் அருள்பாலித்தார். மாலை, 3:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், 6:00 மணிக்கு மலர் பல்லக்கு ஊர்வலமும் நடந்தது. இன்று, சிறப்பு அபிேஷகம், மஞ்சள் நீராடுதலுடன், விழா நிறைவடைகிறது.