பதிவு செய்த நாள்
27
ஜன
2012
11:01
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்தில் 25 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவான சிவ சிம்மாசனத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.உலகிலேயே முதன்முதலாக 25 ஆயிரம் ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட சிவ சிம்மாசனம் ஸ்ரீமுஷ்ணத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை புரிந்துள்ளது. ஸ்ரீமுஷ்ணம் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெ.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பத்மநாபன் பார்வை வளாகத்தை திறந்து வைத்தார். இந்த அரிய சிவ சிம்மாசனத்தை உருவாக்கிய ராசிபுரம் சிவசக்தி பீடம் மேகநாதன் கூறியதாவது : உலகில் வாழும் அனைவருக்கும் கவலை ஏற்படுகிறது. முப்பிறப்பில் செய்த வினை பயன் காரணமாக இப்பிறவியில் நன்மை தீமை ஏற்படுகிறது. மனிதன் தீமைகளில் இருந்து விடுபட இறைவன் கொடுத்துள்ள பல வழிமுறைகளில் ஒன்றுதான் ருத்ராட்சம். ருத்ராட்ச சிம்மாசனத்தை வழிபட்டால் முன்னோர் சாபம், தொழில் அபிவிருத்தி, திருமணத்தடை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம், மன நிறைவு ஏற்படும்.இந்த சிவ சிம்மாசனம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ருத்ராட்ச பந்தலில் 25 ஆயிரம் ருத்ராட்சங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளாக சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி, இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேகத்தில் நாகலிங்கம், பான படிகலிங்கம், ஒருமுக ருத்ராட்சம் முதல் 24 முக ருத்ராட்சம் வரை சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் பிப்ரவரிமாதம் 16,17,18 ஆகியதேதிகளில் புதுச்சேரியில் பொதுமக்கள் தரிசனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.