அறநிலையத்துறையால் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேக பணிகள் தாமதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2018 12:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகப் பணி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளின் தாமதத்தால் தள்ளிப்போகிறது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி நடந்தது. 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கோயில் திருக்கல்யாண மண்டபத்தின் கூரை பெயர்ந்து விழத் தொடங்கியுள்ளது. கோபுரம், விமானங்களில் உள்ள பல சிற்பங்களும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் உடனடியாக கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் ஊருக்கு நன்மை கிடைக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு கும்பாபிஷேகப் பணிகளை துவக்க கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பழமையான கோயில் என்பதால் கும்பாபிஷேகம் நடத்த இந்துசமய அறநிலையத்துறையின் முன் அனுமதி பெற வேண்டும். தற்போது இந்த அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை அறநிலையத்துறை கமிட்டி உறுப்பினர்கள் இக்கோயிலுக்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். மூன்றாவது ஆய்வு நடைபெற இருந்த நிலையில் ஒரு கமிட்டி உறுப்பினர் வராததால் ஆய்வுப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கும்பாபிஷேக பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு பக்தர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பணிகளை சில நாட்களுக்குள் துவக்கினால் தான் அடுத்தாண்டு வரும் வைகாசி திருவிழாவிற்கு முன்பாக கும்பாபிஷேகத்தை தடையின்றி நடத்தமுடியும். எனவே அதிகாரிகள் இக்கோவிலில் ஆய்வுப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்திற்கான அனுமதியை உடனடியாக வழங்கவேண்டும்.