வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2018 12:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் கடந்த 4 நாட்களாக நடந்து வரும் பிரம்மோற்ஸவ விழாவை தொடர்ந்து சுவாமி முதல்நாள் சஷேவாகனத்திலும், 2ம் நாள் அனுமந்த வாகன ராம அவதாரத்திலும், 3ம் நாள் கருடவாகனத்திலும், 4ம் நாள் யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்றார். 5ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. காலையில் யாகசாலை பூஜைகளுடன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதன் பின் கோயில் முன் உள்ள திருமணப் பந்தலில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் எழுந்தருளினர். மூவருக்கும் திருமஞ்சன வழிபாடு மாலை மாற்றும் வைபவம், வைதீக சடங்குகளும் நடந்தன. இறுதியில் சுவாமி, தாயார்களுக்கு தாலி அணிவிக்க திருக்கல்யாணம் நடந்தது. அப்போது பக்தர்கள் அட்சதை துாவி வணங்கினர். தொடர்ந்து நலங்கு வைபவத்துடன் சிறப்பு பூஜை, பக்தர்களுக்கு அன்னதானம், மாங்கல்ய கயிறு பிரசாதம் வழங்குதல் நடந்தது. சென்னை டி.வி.எஸ். அதிபர் சரத்விஜயராகவன் அன்னதானத்தை துவக்கினார். சுற்றுக்கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலையில் சுவாமி குதிரை வாகன எழுந்தருளலும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.