பதிவு செய்த நாள்
28
ஜூலை
2018
12:07
கடலுார்: கடலுார், பழைய வண்டிப்பாளையம், காளவாய் வீதியில் உள்ள எல்லைக் காளி அம்மன் கோவிலில் 118ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி 26ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா தீபாராதனை மற்றும் வேம்பு அரசு திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு காப்பு மற்றும் எல்லை கட்டப்பட்டது. 27ம் தேதி, நேற்று காலை 9:00 மணிக்கு ஊற்றுக்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் வீதியுலா நடந்து, மதியம் 12:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து 1:30 மணிக்கு அம்மனுக்கு 1,008 குடநீர் அபிஷேகமும், சாகை வார்த்தல் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் செடலணிந்தும், அலகு குத்தியும், அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பண்ருட்ட போலீஸ் லைன் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் அம்மன், விநாயகர், சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மூலவர் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:30 மணிக்கு கொடிமரத்திற்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. விழாவில் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.