பதிவு செய்த நாள்
22
நவ
2010
02:11
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.
தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?
வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.
ஏகாதசியன்று செய்யக்கூடாதது
ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
ஏழு பிரகாரம்
இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா <உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.
துவாதசிக்கு அகத்திக்கீரை
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.