பதிவு செய்த நாள்
11
ஆக
2018
11:08
விருதுநகர்: சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை விழாவிற்காக, நேற்று முதல், பக்தர்கள் மலையில் குவிந்து வருகின்றனர். பூலோக கயிலை என, பக்தர்களால் அழைக்கப்படும் சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை விழா, நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, சிவராத்திரியை யொட்டி மாலை, 5:00 மணிக்கு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோவில்களில் வழிபாடுகள் துவங்கின.
சுவாமிகளுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, நடுநிசியில் பூஜையும் நடந்தது. மலையின் காவல் தெய்வமான தாணிப்பாறை கருப்பசாமி கோவிலில் வழிபாடு செய்து, பக்தர்கள் மலைஏறினர்.ஜப்பானை சேர்ந்த, மூன்று பக்தர்கள், புத்த மத வழிபாட்டின்படி, தம்பட்டம் ஒலித்த படி மலையேறிச் சென்றனர். இன்று காலை, 6:00 மணிக்கு துவங்கும் அமாவாசை வழிபாட்டை காண, வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சிவபக்தர்கள் மலையில் குவிந்துள்ளனர். லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவர் என்பதால், 2,000த்துக்கும் மேற்பட்ட மதுரை, விருது நகர் மாவட்ட போலீசார், துப்பாக்கி ஏந்திய, கமாண்டோ படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுஉள்ளனர்.